Monday 2 May 2011

ஓய்வில் இருக்கின்றன வீதிகள்.

ஓய்வில் இருக்கின்றன வீதிகள்.

எந்நேரமும் சந்தடிகளால் நிரம்பிக்கொண்டிருந்தன
சூரியனின் கீழ்..
மிதியடிகளால் மிதிப்பட்டும்
வண்டி சக்கரங்களால் அழுந்தப்பட்டும்
குழந்தைகளின் பம்பரங்களால் குத்துப்பட்டும்
போதைபாக்கின் எச்சில் சுமந்தும்
இணைசேர துரத்தும் நாய்களைக்கண்டும்
ஓய்வற்று ஓடின வீதிகள்..

வீதிகள் கலவி செய்யும் முனையில்
அலைபேசியில் நித்தம் விடலை சமைத்த காதல்கதைகள் கேட்டும்
குழுவாய் திண்ணையில் அமர்ந்து கற்பின் தராசை அடுத்தவளுக்கு
நிறுத்தும் பெண்களின் ஒழுக்கம் அறிந்தும்
காலை புத்தகம் சுமந்த பிஞ்சைகண்டு வெம்பியும்
மாலை அது மொட்டவிழ்ந்ததை ரசித்தும்
சிரித்துக்கொண்டிருந்தன வீதிகள்..

ஒன்றாய் ஓடி ஒன்றாய் குதித்து வாழ்வின் ஆட்டத்தில்
பங்காளிகளான சகோதர சண்டையும்
நித்தம் காலை செல்லசிணுங்கலும்
மயங்கிய மாலையில் கூச்சலும் அடியும்
நிறைந்த குடும்பம் கண்டும்
சிந்தித்துக்கொண்டிருந்தன வீதிகள்...

பிறந்த கனவுகளும் இறந்த நினைவுகளும்
உறவாடும் நெஞ்சங்களின் கதைகள்
யாவும் தாங்கி ஓடின வீதிகள்..

சுமைதந்த நிகழ்வுகள் யாவும்
காற்றோடு அனுப்பி வானத்து காதலனிடம்
செவி சேர்ப்பித்துவிட்டு
ஓய்வில் இருக்கின்றன வீதிகள்..
                                                  

2 comments:

  1. கவிதை அருமை - வீதிகளைப் பற்றிய கற்பனை அருமை அருமை. தினந்தினம் நடக்கும் நிகழ்வுகளை வானத்துக் காதலனுக்கு அனுப்பி விட்டு ஓய்வெடுக்கும் வீதிகள் - வீதிகள் கலவி செய்யும் முனைகள் - ஆகா ஆகா - மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடலாமே - பயனற்ற ஒன்று.

    ReplyDelete