Friday 29 April 2011

என்னிடம் இருந்தன.


என்னிடம் இருந்தன பிரித்தறியாத நட்புமலர்கள்
ஓட்டை டவுசருடன் நுங்குவண்டி ஓட்டும் அய்யனாருடன்
வழிந்துவாரி மூக்குசளி ஒழுக
மின்னல்வேகத்தில் ஓடும் தனபாலுடன்
பாம்படம் மாட்டிய காதுடன்
மிரட்டலான அன்புடன் பள்ளிக்கு
அழைத்துச்செல்லும் கருப்பாயிஆயாவுடன்
நெஞ்சில் கள்ளத்தனம் புகும்வரை
திமிறத்திமிறக்கொஞ்சும் மஞ்சுளா அக்காவுடன்
மேனிலைப்பள்ளி செல்லும்வரை அத்தைப்பெண்ணுடன்
கல்லூரிகனாக்காலம்வரை செல்லமான அப்பாவுடன்
மனைவி வரும்வரை மடிபுகுந்த அம்மாவுடன்

கவனப்புள்ளிகளிட்டுச்சென்ற பருவங்கள்
பாவனைகள் சுமத்தி
உயிர்ப்பைக்கரைத்துவிட்டன
விலகியும் விலகாமலும் நின்ற உணர்வுகளை
வாக்கியங்கள் வென்றுவிட்டன.
..
..

Wednesday 20 April 2011

மனம் என்னும் நதி

மனம் என்னும் நதி

பல ஊற்றுகளின் எண்ணங்கள் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கின்றது என் மன நதி
வண்டல்களாய் குப்பையும் அழகாய் கூழாங்கற்களும்
சேகரித்துக்கொண்டு குளுமையாய் ஓடிக்கொண்டிருக்கின்றன பொழுதுகள்

என் கடல் எங்கே என்று நித்தம் தெரிந்த கேள்விக்கு
தெரியாத வழியில் தேடிக்கொண்டிருக்கின்றேன்

ஏக்கங்களும் ஆசைகளும் தேடல்களும்
அணைபோடாத நதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது
என் மன நதி

பாலங்கள் கட்டுமானித்து கதைகள்
பேசிச்சென்ற ஒற்றைமனிதர்கள் ஏராளம்
அவர்கள் என் உணர்வுகளுக்கு வழிப்பயணியாய் வந்தவர்கள்

என்னுள் குதித்து என் உணர்ச்சிகளில் முத்துகுளிப்பவர்கள் மீதமிருப்போர்

யாராயினும் என் நதியின் வளம் சேர்க்கின்றனர்

ஓடிக்கொண்டிருக்கும் என் மன நதி.